! BHAGYALAKSHMII !! WELCOMES !!!

BHAGYA'S ILLAM | ANSWERS | WOMAN | Ivargal | PHOTO MOTTO | my likings | EElam | Stories | CHAT BROOM | CONTACT ME

Home Matters

வாஸ்து சாஸ்திரம் !
 
என்  கணவர் தனஞ்செயன் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பார். வாஸ்து  சாஸ்திரம் என்பது ஒரு வீடு கட்டும் போது அது எந்த விதத்தில் இருக்க வேண்டும், எது எது எந்த விதத்தில் இருந்தால் அதில் வாழ்பவருக்கு நன்மைகள் வந்து சேரும், என்னென்ன  பொருட்கள் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும், எந்த பொருட்கள் இருக்கக் கூடாது  என்பதை பற்றியது. இது முன்னெப்போதையும் விட தற்போது அனைவராலும் விரும்பப்படுகிறது. என்னை பொறுத்த வரை வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று இல்லை. இது தெரியாமல் வாஸ்து  சாஸ்து என சிலர் நாஸ்து செய்வதை பார்த்தால் எனக்கு பாவமாய் இருக்கிறது. என் கணவர் கூட வாஸ்துவை நம்புவதில்லை என என் மனதுக்கு தெரியும். ஆனால் என்ன பண்ண. அவருக்கு இது ஒரு தொழிலாக போய் விட்டது. அதுவும் சிலர் கைகளில் கரன்சியை வைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்துக் கொண்டு எப்படியோ இருந்த நான் இப்போது இப்படியாகி விட்டேன் என்று நடிகர் விவேக் போல புலம்பித் தள்ளி, கொண்டு  வந்த பணத்தை உங்களிடம் தொலைக்காமல் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் அவரை நல்ல புத்தி சொல்லி திருப்பி அனுப்பினாலும் இன்னொரு வாஸ்து பார்ப்பவரிடம் சென்று பணத்தை இழக்க  தயாராக இருக்கிறார்கள். அதனால் நாங்களே வாஸ்து பார்த்து விடுவது என முடிவு செய்து வாஸ்து பார்த்து வருகிறோம். அவர்கள் நெற்றியில் இன்ன விதமாய் அந்த பிரம்மன் எழுதி  இருக்கும் போது அதை திருத்த எழுத நாங்கள் என்ன அந்த பிரம்மனை விட மேலானவர்களா என்ன?

மூன்று வகையினர் தான் வாஸ்து பார்க்கிறார்கள்  !
 
வாஸ்து பார்ப்பவர்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் இருந்து கீழே வந்தவர்களும், நல்ல நிலைமையில் இருந்து எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று எந்நேரமும் பயம் கொண்டவர்களும், இவர்களை பார்த்து தன்னை சூடுப் போட்டு கொள்கிறவர்களும் என மூன்று வகைப்பட்டவர்கள். இதில் முதல் வகையினர் நல்ல நிலையில் தங்கள் இருக்கும் போது தன்னோடு கூட இருப்பவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். அந்த துரோகம் பிற்பாடு இவர்களையே இவர்களின் வியாபாரத்தையே படுக்குழிக்கு தள்ளி விட்ட பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வாஸ்து சாஸ்திரம்  செய்தால் நிமிர்ந்து விடலாமோ  என்கிற நம்பிக்கையில் அலை மோதுகிறவர்கள். இவர்கள் வாஸ்து வை நம்புவதை விட்டு விட்டு தங்களை திருத்திக் கொண்டாலே மீண்டும் தங்கள் முன்னேற்றப்  பாதைக்கு வந்து விடலாம். அதை விட்டு விட்டு மேலும் பணத்தை அழிக்கும் முகமாக செயல் படுகிறார்கள். ஏனென்றால் வீணே வந்த பணம் வீணே தான் போகும் என்கிற உலகமறையாம் திருக்குறள் சொல்லுவதைப் போல. இவர்கள் இருந்து இருந்து பின்னுக்கு போய் கொண்டு இருப்பவர்கள். இவர்களுக்கு நல்ல ஆலோசனை தேவை. அது கிடைக்கும் வரை அல்லது கைக் காசு கரையும் வரை இவர்கள் வாஸ்து ஜோசியம் என வேஸ்து பண்ணிக் கொண்டு தான் இருப்பார்கள். 
 
அடுத்த வகையினர் இப்படி. ஆரம்பமே அதிரடியாக இருக்க வேண்டும். எங்கும் தப்பு நடந்து விடக் கூடாது. ஒரே தாவலில் வானை தொட்டு விட வேண்டும் இவர்களுக்கு.  தன்னை சுற்றி எதிரிகள் சூழ்ந்து இருப்பதைப் போலவும், தன்னை குப்புறக் கவிழ்க்க அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டு இருப்பதை போலவும், தான் அவர்களையெல்லாம் ஒருசேர ஒரே சீவலில் தலைகளைக் கொய்து விட வேண்டும் போலவும் நடந்துக் கொள்வார்கள். காசு இவர்களுக்கு பொருட்டல்ல. அவர்கள் நினைப்பது நடந்து விட வேண்டும். நாம் ஏதேனும் ஒன்று சொல்லி நடந்து விட்டால் நம்மை தெய்வம் போல கொண்டாடுவார்கள். உங்கள் வீட்டின் முன்வாசலை தூக்கி பின்வாசலிலும் பின்வாசலை தூக்கி முன்வாசலிலும் வையுங்கள் என்றால் யோசிக்காமல் செய்பவர்கள் இவர்கள் தான்.
 
மூன்றாம் வகையினர் மேலே சொன்ன இருவகையினரை பார்த்து தானும் சூடுப் போட்டுக் கொள்கிறவர்கள். இவர்களுக்கு சொந்தமாக மூளை இருக்காது. இரவல் மூளை தான். அதனால் பணத்தையும்  இரவல் வாங்கியாவது வாஸ்து பார்ப்பார்கள். வெகுவாக கடன் ஏற்பட்டு கழுத்தை நெரித்த பின்பு திருந்துவதை தவிர வேறு வழியே இல்லை என்று ஆன பின்பு தானே திருந்தி விடுவார்கள்.

vastu.gif

        இவர் தான் வாஸ்து கடவுள். இவரே, எப்படி ஒரு வீடு  கட்டிக் கொண்டு  குந்த முடியாமல், குறுக்காலே குந்திக் கொண்டு இருக்கிறார், பாருங்கள் !  இவரை நம்பியா நீங்கள் வீடு கட்டுகிறீர்கள்? விந்தை தான்.